ஈரோடு-கிழக்கு தொகுதியில் பிப்.27ஆம் தேதி வாக்குப்பதிவு - விதிமுறைகள் அமல்

ஈரோடு - கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Jan 19, 2023 - 07:44
Jan 19, 2023 - 07:51
 0
ஈரோடு-கிழக்கு தொகுதியில் பிப்.27ஆம் தேதி வாக்குப்பதிவு - விதிமுறைகள் அமல்

ஈரோடு - கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஈரோடு - கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா ஜனவரி நான்காம் தேதி காலமானார். அதைத்தொடர்ந்து ஈரோடு - கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டது. அதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு தொகுதிகள், மேற்குவங்கம் மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் தலா ஒரு தொகுதி மற்றும் ஈரோடு - கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் காலமானதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

லட்சத்தீவு தொகுதி உறுப்பினரான முகமது பாசில் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் அங்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராம்கர் தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தகுதி இயக்கம் செய்யப்பட்டிருப்பதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு - கிழக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பிற ஆறு தொகுதிகளுக்கான தேர்தல் அரசாணை ஜனவரி 31ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி ஏழாம் தேதி முடிவடைந்து பிப்ரவரி எட்டாம் தேதியன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். இந்த இடைத்தேர்தல்களில் வேட்பு மனுவை திரும்பப்பெற கடைசி நாள் பிப்ரவரி 10ஆம் தேதி என தேர்தல் ஆணைய அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

image

பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, பின்னர் மார்ச் இரண்டாம் தேதி வாக்குகள் என்னப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திருமகன் ஈவேரா மறைவினால் காலமான ஈரோடு-கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை இறுதி முடிவு எடுக்கும் என கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை ஈரோடு-கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. இபிஎஸ்-ஓபிஎஸ் உட்கட்சி மோதல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், கட்சி யார் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது தொடர்பான பரிசீலனை தேர்தல் ஆணையத்திலும் நடைபெற்று வருவதாலும், அதிமுகவில் சூழல் எப்படி இருக்கும் என்பது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரின் கையெழுத்தும் தேவைப்படுமா அல்லது இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு உள்ளதா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த இடைத்தேர்தல் மூலமாக பதில்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது வெளிவரும் என்பதும் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக எப்போது தனது முடிவுகளை இறுதி செய்யும் என்பதும் தமிழக அரசியலில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் அம்சங்களாக உள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

image

இடைத்தேர்தல்

பொதுவாக இதுபோன்ற அறிவிப்பின்போது இந்தியாவில் பல்வேறு இடங்களில் காலியாக உள்ள சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலையும் இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.

தயார் நிலை

இதற்கிடையே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை, அவற்றின் தயார் நிலை, வாக்குச்சாவடிகளின் தயார் நிலை, பாதுகாப்புப் பணி, தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்திய தேர்தல் கமிஷனுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஏற்கனவே அனுப்பி இருந்தார்.

image

நடத்தை விதிகள் அமல்

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டியில், “ஒவ்வொரு மாதமும் வாக்குப்பதிவு எந்திரங்களின் இருப்பு குறித்த விபரங்களை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைப்போம். அந்த விவரங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வரும் பிப்ரவரி 27 என்று இந்திய தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. அங்கு 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அங்கு 500 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 லட்சத்து10 ஆயிரத்து 713, பெண்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பேர் மற்றும் 3-ம் பாலினத்தவர் 23 பேர் உள்ளனர். ஈரோடு நகராட்சி ஆணையர் சிவகுமார், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, அந்த மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட முடியாது. அங்கு பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பொருட்கள், பணம் கொண்டு செல்லும்போது பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்” என்று அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow